ஹெஜ்எஸ்பிசி வங்கி நிறுவனத்தின் முன்னாள் மூத்த துணைத் தலைவரான 39 வயது எமிலின் தங் வெய் லெங், $5.2 மில்லியனுக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் 10 ஆண்டு, ஆறு மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். தீர்ப்பின்போது மொத்தம் 223 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. முன்னதாக 34 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட தங், தன் குடும்ப உறுப்பினர் நால்வர் உட்பட ஐந்து மூத்த குடிமக்களை ஏமாற்றியுள்ளார்.
2004 முதல் 2012 வரை அவ்வங்கியில் பணிபுரிந்த தங், வயதான, எளிதில் ஏமாறக்கூடியவர்களின் வாழ்நாள் சேமிப்பை இழக்கச் செய்து அவர்களைத் தவிக்கவிட்டதால், அவர்கள் இழப்பி லிருந்து மீள முடியாமல் குறைந்த நிதியுடன் தங்களது ஓய்வுக் காலத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் சுட்டினார். தங் ஏமாற்றிய பணத்தில் $800,000க்கும் மேல் பாதிக்கப் பட்டவர்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் மீதிப் பணத்தை முன்னாள் கணவரது சூதாட்டக் கடனை அடைக்கவும் தன் தந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தினார் என்றும் தங்கின் வழக்கறிஞர் கூறினார்.

