கேலாங் ஈஸ்ட் சிவன் கோயிலுக்கு வருகை தந்த ராஜபக்சே

1 mins read
9b803085-1caa-4d49-b527-572cc2e81ceb
-

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் வந்துள்ளார். குறுகிய காலப் பயணமாக இங்கு வந்துள்ள அவர், நேற்று கேலாங் ஈஸ்ட் சிவன் கோயிலுக்கு வருகை யளித்தார். கோயிலில் சிறப்பு திருமுழுக்கு, வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் திரு ராஜபக்சே தமிழ் முரசிடம் பேசினார். சிங்கப்பூரின் வளர்ச்சியும் சட்ட ஒழுங்கும் தம்மை எப்போதும் வியக்க வைப்பதாகக் கூறிய திரு ராஜபக்சே, இலங்கையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எப்போதும் தமது இலக்கு என்றார்.

சிங்கப்பூரைப் போல் இலங்கையிலும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற அவர், தமது ஆட்சிக் காலத்தில் அதையே நோக்கமாகக் கொண்டு செயல் பட்டதாகக் கூறினார். ஒரு காலத்தில் இலங்கைபோல் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் மறைந்த திரு லீ குவான் இயூ விரும்பினார். இப்போது சிங்கப்பூர் போல் இருக்க வேண்டும் என்று இலங்கை விரும்புகிறது. ஏறக்குறைய 30 ஆண்டு கால போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலில், மின்சாரம், சாலைகள், கல்விப் போன்ற அடிப் படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தமது பணியாக இருந் தது என்றார். அந்த வகையில் தாம் ஓரளவு வெற்றியைச் சாதிக்க முடிந்ததாகவும் திரு ராஜபக்சே கூறினார்.