சிங்கப்பூரில் மோசமான இணையத் தாக்குதல்: பிரதமர் லீ உள்ளிட்ட 1.5 மி. சிங்ஹெல்த் நோயாளிகளின் விவரங்கள் களவு

சிங்கப்பூரில் மோசமான இணையத் தாக்குதல்: பிரதமர் லீ உள்ளிட்ட 1.5 மி. சிங்ஹெல்த் நோயாளிகளின் விவரங்கள் களவு

2 mins read
1b8ead43-8e7e-481d-91ad-7bdc5237d2bd
-

சிங்கப்பூரில் இதுவரையிலும் இல்லாத வகையில் மிக மோசமான இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிங்ஹெல்த் இணையத் தளம் ஊடுருவப்பட்டு, பிரதமர் லீ சியன் லூங் உட்பட சுமார் 1.5 மில்லியன் பேரின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளன. சிங்ஹெல்த் வெளிநோயாளி மருந்தகங்களின் மூலம் கிட்டத்தட்ட 160,000 பேருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளின் விவரங்களும் திருடப்பட்டன.

குறிப்பாக பிரதமர் லீயின் தகவல்களைப் பெற மீண்டும் மீண்டும் இணையத்தில் ஊடுருவ முயற்சி செய்யப்பட்டது என்று சுகாதார அமைச்சும் தொடர்பு, தகவல் அமைச்சும் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 4ஆம் தேதி இந்த இணைய ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதைத் தொடர்ந்து உடனே இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன என்றும் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார். ஜூன் 27 முதல் ஜூலை 4 வரையில் நடைபெற்ற இணையத் தாக்குதலில் 2015ஆம் ஆண்டு மே 1 முதல் இம்மாதம் 4ஆம் தேதி வரையில் சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களுக்கு வருகை புரிந்தோரின் விவரங்கள் திருடப்பட்டுள்ளன.

இது மிகவும் நூதனமான, கவனமாக திட்டமிடப்பட்ட, குறிப்பிட்ட இலக்குடன் நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கூறினார். இதுவே சிங்கப்பூரில் நடத்தப்பட்ட மிக மோசமான இணைய தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் நோயாளிகளின் சுகாதாரக் குறிப்புகளும் தகவல்களும் திருடப்படவில்லை, அவை மாற்றப்படவுமில்லை. பாதிக்கப்பட்டோருக்கு சுகாதார இது குறித்து தகவல் அனுப்புவதுடன் இந்த இணைய ஊடுருவல் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவும் அமைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.