சிங்கப்பூரின் தலைமை நீதிபதி திரு சுந்தரேஷ் மேனன், ஆசியான் சட்ட சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் சங்கத்தின் 13வது பொதுப் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடந் தது. அதில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு சுந்தரேஷ் மேனன், மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார்.
ஆசியான் சட்ட சங்கம் அரசு சாரா அமைப்பாகும். அது ஆசியான் வட்டாரம் முழுவதையும் சேர்ந்த சட்டத்துறை நிபுணர்களை ஒருங்கிணைக்கிறது. இந்தச் சங்கத்தின் சிங்கப்பூர் தேசிய குழுவிற்கும் தலைமை நீதிபதி திரு மேனன் தலைமை தாங்குகிறார். ஆசியான் சட்ட சங்கத்தின் 13வது தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அந்தப் பதவியை வகிக்கும் மூன்றாவது சிங்கப்பூரர் தலைமை நீதிபதி திரு மேனன் ஆவார்.

