தோ பாயோ இந்து கோயிலில் தேசிய தினத்தை முன்னிட்டு பல இன மக்களின் வருகை

தோ பாயோ இந்து கோயிலில் தேசிய தினத்தை முன்னிட்டு பல இன மக்களின் வருகை

2 mins read

எஸ்.வெங்கடேஷ்வரன்

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினம் அன்று நடைபெறும் சந்தனக்குடம் அபிஷேகத்தில் முதல் முறையாக பல இன தோ பாயோ குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நேற்றுக் காலை 9.30 முதல் 11 மணி வரை சுமார் 200 குடியிருப் பாளர்கள், தொண்டூழியர் களின் உதவியால் கோயிலைச் சுற்றிப் பார்த்தனர். கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, தோ பாயோ சென்ட்ரல் இன, சமய நன்னம்பிக்கைக் குழு, கோயிலின் நிர்வாகத்தோடு சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற் பாடு செய்திருந்தன.

விழாக்கோலம் பூண்ட தேசிய தினத்தன்று அனைத்து இன, சமய, கலாசாரங்களைச் சேர்ந்தவர் கள் இந்து சமயத்தின் வழிபாட்டு வழக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று குறிப்பிட்டார் கோயிலின் துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பி னர்களில் ஒருவருமான திருமதி சுசிலா காந்தியன், 47. "தேசிய தினத்தன்று பல இனத்தவர்களைக் கோயிலுக்கு வரவழைப்பது நம் சிங்கப்பூரின் பல இன ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக அமைகிறது.

இந்நிகழ்ச் சியை வழிநடத்தும் தொண்டூழியர் களுக்கும் கோயில் நிர்வாகத்தினர் தேவையான பயிற்சிகளை அளித் துள்ளனர்," என்றார் திருமதி சுசிலா. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் தங்கி வரும் திருமதி ‌ஷு கீ, 60, நேற்று முதல் முறையாக ஓர் இந்து கோயிலில் கால் எடுத்து வைத்தார். தோ பாயோ வட்டாரத்தில் வசிக்கும் அவர் அங்குள்ள சமூக மன்றத்தில் ஓர் உறுப்பினராக இருப்பதால் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்துகொண்டார்.