உட்லண்ட்ஸ் வீடு ஒன்றில் மின்-ஸ்கூட்டருக்கு மின்னேற்றம் செய்தபின் அதன் இணைப்பை அகற்றும் வேளையில் மின்- ஸ்கூட்டர் தீப்பிடித்துக் கொண்டதில் ஒருவருக்கு முதுகிலும் வலது கையிலும் தீப்புண் காயங்கள் ஏற்பட்டன. செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இச்சம்பவத்தில் தீப்பற்றிய தன் மின்-ஸ்கூட்டரை இரு மாதங்களுக்கு முன்னர் 'கரொசல்' எனும் இணையத்தளத்தின் மூலம் வாங்கியதாக பகுதிநேர உணவு விநியோகம் செய்பவராகப் பணிபுரியும் திரு முகமது ஃபைசுல் கூறினார்.
தன் மின்- ஸ்கூட்டர் தீப்பற்றுவதற்கு முன் மூன்று மணி நேரமாக மின்னேற்றம் செய்ததாகவும் இதற்குமுன் மின்னேற்றம் செய்தபோது எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறினார். வேறொரு சம்பவத்தில் நேற்று முன்தினம் சீமெய் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியது. சுமார் 150 குடியிருப்பாளர்கள் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இரு தீச்சம்பவங்களுக்கான காரணத்தை நிர்ணயிக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தி வருகிறது.

