ப.பாலசுப்பிரமணியம்
பாடங்களைக் கற்றுக்கொடுப்பது மட்டுமல்ல, மாணவர்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவது, கேள்வி கேட்க வைப்பது, தன்னம்பிக்கை உடையவர்களாக்குவது ஆகியவையும் ஆசிரியர் ஒருவரின் பணிகளே என்று நம்புகிறார் திருமதிச் சு.நிர்மலா தேவி, 54. கடந்த 30 ஆண்டுகளாக வகுப்பில் இதனை நடைமுறைப்படுத்தி வரும் கோங்யாங் தொடக்கப்பள்ளியின் அறிவியல் ஆசிரியரான இவர், நேற்று மிக உயரிய ஆசிரியர்களுக்கான அதிபர் விருதைப் பெற்றார். இஸ்தானாவில் நேற்று நடந்த ஆசிரியர் தின உபசரிப்பு நிகழ்ச்சியில் திருமதி நிர்மலா தேவி உட்படத் தலைசிறந்த எட்டு ஆசிரியர்கள் இந்தக் கௌரவ விருதினை அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். கடந்த 1985ல் தமது 'ஏ' நிலை தேர்வுக்குப் பிறகு பகுதி நேரமாக மார்சிலிங் தொடக்கப்பள்ளியில் சில மாதங்கள் கற்பித்தபோது ஆசிரியர் பணி மீது திருமதி நிர்மலா தேவிக்கு ஈர்ப்பு வந்தது. இதையடுத்து, அன்றைய தேசிய கல்விக் கழகத்தில் ஈராண்டு ஆசிரியர் பயிற்சியை முடித்தபிறகு 1988ஆம் ஆண்டில் யீஷூன் வட்டாரத்தில் அமைந்துள்ள சிஷான் தொடக்கப்பள்ளியில் தமது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். தேர்வுக்குத் தயாராகும்போது, அனைத்துப் பாடங்களையும் குறுகிய காலத்திற்குள் படித்துவிட முயலாமல் நேரத்தை வகுத்துப் படிக்கும்போது நல்ல பயனை அடையலாம். இதுபோன்ற வாழ்க்கைத்திறன்களையும் பண்புநெறிகளையும் திருமதி நிர்மலா தேவி வகுப்பறையில் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார். வழிகாட்டு (லீட்) ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கும் இவர், தொடக்கநிலை 1, 2 மாணவர் களின் சிந்தனைத்திறனை வளர்க்க உதவும் தேசிய அளவிலான நான்கு ஆங்கில, கணித புத்தகங் களைச் சக மூத்த, வழிகாட்டு ஆசிரியர்களுடன் சேர்ந்து வெளியிட்டது இவரின் பங்களிப்புகளில் ஒன்றாகும். திருமதி நிர்மலாவின் கற்றல் முறைகளால் மாணவர்கள் இவரது வகுப்பிற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். "பாடத்தைச் சுவாரசியமாகக் கற்றுத்தர அவருக்குத் தெரியும். பொறுமையுடன் கற்பிப்பார், குழுக்களாகப் பிரித்து ஏதாவது ஒரு வித்தியாசமான நடவடிக்கையில் எங்களை ஈடுபடுத்துவார். எதிர்காலத்தில் மரபணு தொடர்பான பொறியாளராக விரும்புகிறேன்," என்றார் திருமதி நிர்மலா தேவி யிடம் அறிவியல் பாடம் பயிலும் ஆறாம் நிலை மாணவி சந்தியா சுரேஷ், 12. "ஆசிரியர்களாக என்ன செய்கிறோம் என்பது முக்கியம் என் றாலும் மாணவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்பது அதைவிட முக்கியம். சமுதாயத்துக்குப் பங்காற்றும் வகையில் அவர்கள் உருவானால் நமது பணி நிறைவடைகிறது," என்றார் 'திருமதி சேம்' என்று அழைக்கப்படும் இந்தப் பேரார்வமிக்க ஆசான்.

