'மீட்கப்பட்ட பாலைக் கூடுதல் ஐந்து குழந்தைகள் குடித்திருக்கலாம்'

1 mins read

நுண்ணுயிர்க் கிருமியைக் கொண்டிருந்ததாக சோதனையின் வழி தெரிய வந்த 'டூமெக்ஸ் மமில் கோல்ட் இன்ஃபன்ட் ஃபார்முலா- ஸ்டேஜ் 1' எனப்படும் குழந்தைக்கான பால் மாவை கூடுதலான ஐந்து குழந்தைகள் குடித்திருக்கக்கூடும் என்று கேகே மகளிர், சிறார் மருத்துவமனை நேற்று தெரிவித்தது. அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் விவரங்களைத் தமது பதிவேட்டில் தேடிப் பார்த்ததில் அந்தக் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் குழந்தைகளின் பராமரிப்பாளர்களை தான் தொடர்புகொண்டுள்ளதாகக் கூறிய அம்மருத்துவமனை, குழந்தைகள் தற்போது நலமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

"குழந்தைகளின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் எப்போதும் எங்களது தலையாய அக்கறையாக உள்ளது," என்றார் கேகே மருத்துவமனையின் மருத்துவச் சபையின் தலைவரான இணைப் பேராசிரியர் இங் கீ சோங். மலேசியாவிலிருந்து இறக்குமதியான ஒரு குறிப்பிட்ட தொகுதி 850 கிராம் எடையுள்ள 4,200 டின்களில் உள்ள கிருமியால் குழந்தைகளுக்குக் காய்ச்சல், சோம்பல் போன்ற அறிகுறிகள் தென்படலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.