அதிகாரி மீது காரை மோதிய ஊபர் ஓட்டுநருக்கு இரு வார சிறை

1 mins read

வேளாண்-உணவு கால்நடை மருத்துவ ஆணைய (ஏவிஏ) அதிகாரி ஒருவர் மீது காரை மோதிய 55 வயது ஊபர் ஓட்டுநர் அப்துல் மாலிக் முகம்மது ஹனஃபியாவுக்கு நேற்று இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அனைத்துப் பிரிவு வாகனங்களை ஓட்ட அவருக்கு 10 மாதத் தடையும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது. ஏவிஏ அதிகாரியான 48 வயது முகம்மது ரோஸி ஜமில் அன்று பால்மர் ரோட்டில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாலை 4 மணியளவில் மாலிக் அங்கு புறாக்களுக்குத் தீனி போட்டதைக் கண்ட திரு ரோஸி, அவ்வாறு செய்ய வேண்டாம் என அவரை எச்சரித்தார். இருந்தும், திரு ரோஸியை பொருட்படுத்தாமல் அந்த இடத்தைவிட்டு புறப்பட்டு தமது காரை நோக்கிச் சென்றார் மாலிக்.

அவரை நோக்கிப் பின்தொடர்ந்த திரு ரோஸி, தமது ஏவிஏ அட்டையைக் காட்டினார். அப்போதும் திரு ரோஸியை புறக்கணித்த மாலிக், தமது காரில் ஏறினார். அப்போது, காருக்கு முன்னால் சென்று பதிவு எண்ணை திரு ரோஸி குறித்துக்கொண்டதைப் பார்த்துச் சினமடைந்த மாலிக், திரு ரோஸியை நோக்கி காரை ஓட்டி அவரது முட்டியின் மீது மோதினார். நிலை தடுமாறிய திரு ரோஸி, காரின் முற்பகுதி மீது விழுந்தார். காயம் அடைந்த அவர், காரை நகர விடாமல் தடுக்க, மாலிக் காரைவிட்டு இறங்கினார். திரு ரோஸி போலிசிடம் புகார் அளித்ததை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.