பதின்ம வயது பெண் ஒருவரை மூன்று ஆடவர்கள் சேர்ந்து 12 மணி நேரத்துக்குக் கடுமையாகத் தாக்கியதை அடுத்து, அப்பெண்ணின் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. அவரது உடலின் திசுக்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக அந்த இளம் பெண்ணின் சிறுநீரகங்கள் செயலிழந்தன. தாக்குதலுக்குப் பிறகு அந்த 16 வயது பெண்ணை அந்த மூவரும் அடுக்குமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் விட்டுச் சென்றனர். அங்கு அவரைப் பார்த்த சிலர் உதவிக்கு விரைந்தனர். அந்தப் பெண்ணைத் தாக்கிய வர்களில் ஒருவரான 32 வயது அமினுதீன் சிரேகார் அமினுல்லா சிரேகாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
ஆயுதம் பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்குப் படுகாயம் விளை வித்த குற்றத்தையும் அவரை மிரட்டிய குற்றத்தையும் அமினுதீன் ஒப்புக்கொண்டார். போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டார். அவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணைத் தாக்கிய 27 வயது முகம்மது காலிஸ் கைரி, 28 வயது ருஷ்டி ருஸ்லி ஆகியோருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. தாக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்க வில்லை. இந்தத் தாக்குதல் தெலுக் பிளாங்கா கிரெசண்ட்டில் இருக்கும் அமினுதீனின் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி இரவு 7 மணி அளவில் தொடங்கியது. முதலில் அமினுதீன் அந்தப் பெண்ணை உலோகக் கம்பு ஒன்றைப் பயன்படுத்தி தாக்கிய தாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மற்ற இருவரும் அவருடன் சேர்ந்து பெண்ணை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

