சிங்ஹெல்த் சுகாதாரக் குழு மத்தின் மின்னியல் மருத்துவ குறிப்புகளுக்கான தரவுத்தள அமைப்பில் முன்னதாகவே அறியப்பட்ட பாதுகாப்பு குறை பாடு குறித்து நிர்வாகத்தினர் நட வடிக்கை எடுக்க தவறியதாக, இதற்கான விசாரணைக் குழு தெரிவித்தது. ஜூன் மாதத்தில் நடந்த ஊடுருவலுக்கு இந்த குறைபாடு வழிவிட்டிருக்கலாம் என்று தலைமை வழக்குரைஞர் குவெக் மீன் லக் தெரிவித்திருக்கிறார். 'ஐஹிஸ்' எனப்படும் ஒருங் கிணைக்கப்பட்ட சுகாதார தகவல் அமைப்பைச் சேர்ந்த திரு கிளேரன்ஸ் சுவாவை விசார ணைக் குழு நேற்று குறுக்கு விசாரணை செய்தது. 2008ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, இங்குள்ள சுகாதார நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை கவனித்து வருகிறது. 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் தனக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப் பப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து அவர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. சிங் ஹெல்த்தின் தலைமை தகவல் அதிகாரியின் அலுவ லகத்தின் துணை இயக்குநர் பொறுப்பும் திரு குவாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
'ஐஹிஸ்'ஸின் அப்போதைய தலைவர் டாக்டர் சோங் யோக் சின் அந்த மின்னஞ்சலை திரு குவாவுக்கு அனுப்பியிருந்தார். ஐஹிஸ் ஊழியர் ஒருவர் அந்த பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டு பிடித்ததாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. தரவு அமைப்பின் நிரல் தொடரிலுள்ள பிழை ஒன்றால், ஊடுருவிகள் எளிதாக தரவுத் தளத்தைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் இதனால் மருந்து பற்றிய தகவல் கசிவு அல்லது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அந்த மின்னஞ்சல் எச்சரித்தது. மின்னஞ்சல் கிடைத்தபோதும் இந்த குறைபாடு என்ன என்பதை விசாரிக்க திரு குவா அப்போது ஏன் முற்படவில்லை என கேட்கப்பட்டார்.

