மின் உற்பத்தி நிறுவனங்களான 'செம்ப்கார்ப் கோஜன்', 'செனோக்கோ எனர்ஜி' ஆகியவற்றின் மின் உற்பத்தி நிலையங்களில் செயலிழப்பு ஏற்பட்டதில் சென்ற மாதம் 18ஆம் தேதியன்று 14 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு நாட்டின் மிக மோசமான மின்தடைச் சம்பவம் ஏற்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட நிலையங்கள் அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களின் பரிந்து ரைகளின்படி ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வந்ததாக வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
146,500 பேரைப் பாதித்த இம்மின்தடைச் சம்பவத்தைத் தொடர்ந்து எரிசக்தி சந்தை ஆணையம் செயலிழப்பு ஏற்பட்டதன் மூல காரணத்தைக் கண்டறிய இரு மின் உற்பத்தி நிறுவனங்களுடனும் அவற்றின் இயந்திர உற்பத்தியாளர்களுடனும் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது. பராமரிப்பு இருந்தும் செயலிழப்பு ஏற்பட்டது என்றும் அதே உற்பத்தித் தொழில்நுட்பம் சிங்கப்பூரின் வெவ்வேறு உற்பத்தி நிலையங்களிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்தப்படுவதால் இதேபோன்ற மின்தடை அங்கும் நடக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

