அனுமதியில்லா அணிவகுப்பில் ஈடுபட்டவருக்கு அபராதம்

அனுமதியில்லா அணிவகுப்பில் ஈடுபட்டவருக்கு அபராதம்

1 mins read
884c6364-f73d-4fb4-9e30-90ff36396bdc
-

உரிமம் இன்றி நடத்தப்பட்ட பொது அணிவகுப்பில் பங்கேற்றதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த மறுத்ததால் கலைஞரும் ஆர்வலருமான 33 வயது சீலன் பிள்ளைக்கு (படம்) இரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று, கலைப்படைப்பின் ஓர் அங்கமாக ஹோங் லிம் பூங்காவிலிருந்து தேசிய கலைக்கூடத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் நடந்துசென்றபோது சீலன் கைது செய்யப்பட்டார். பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட சீலனுக்கு நேற்று $2,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் அபராதம் செலுத்த மறுத்தார். அதனால் அவருக்கு இரு வார சிறைத்தண்டனை விதித்கப்பட்டது. தமது கலைப்படைப்புக்கு தேசிய பூங்காக் கழகத்தின் உரிமத்தை சீலன் பெற்றிருந்தார்.

அது ஹோங் லிம் பூங்காவிலுள்ள பேச்சாளர் பகுதியில் படைப்பதற்கு மட்டுமே உரிய உரிமம். பூங்காவிலிருந்து தேசிய கலைக்கூடத்திற்கு நடந்த சீலன், கையில் வைத்திருந்த கண்ணாடியில் மார்க்கர் பேனாவால் வரைந்தார் என நீதிமன்றம் அறிந்தது. பின்னர் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாசல் ஒன்றின் நடுவில் தனக்கெதிரே கண்ணாடியைப் பிடித்தவாறு அவர் நின்றார். அங்கிருந்து நகர மறுத்ததால் போலிஸ் அவரைக் கைது செய்தது. சீலன் அன்று வேண்டுமென்றே சட்டத்தை மீறிச் செயல்பட திட்டமிட்டிருந்தார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். சீலன் முன்கூட்டியே அந்த நிகழ்ச்சி குறித்து விளம்பரப்படுத்தி இருந்ததாகவும் அது திட்டமிட்ட நிகழ்வு என்றும் மாவட்ட நீதிபதி சலினா இஷாக் கூறினார்.