கேலாங்கில் இரண்டுமாடி கடைவீடு ஒன்றின் தரைத் தளத்தில் மின்சைக்கிள் ஒன்று தீப்பிடித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட கைக்குழந்தை அவசரஅவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. எண் 527, கேலாங் ரோடு முகவரியில் புதன்கிழமை காலை 7.20 மணிக்கு அந்தச் சம்பவம் பற்றி தங்களுக்குத் தகவல் வந்ததாகவும் மின்சைக்கிளில் மூண்ட தீயைத் தீயணைப்பாளர்கள் அணைத்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியதாக தி நியூ பேப்பர் தெரிவித்தது. தீ சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்ட கைக்குழந்தை கேகே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது மேல்மாடிக்குப் புகை பரவியதால் அங்கிருந்த கைக்குழந்தை பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது. சைக்கிளில் தீ மூண்டபோது மேல்மாடியில் ஏழு பேர் இருந்ததாக ஷின் மின் டெய்லி குறிப்பிட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் உள்ள கடை, பழைய மின்னணுச் சாதனங்களை விற்றுவந்த கடை என்றும் அந்தக் கடை புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் ஷின் மின் செய்தித்தாள் குறிப்பிட்டது.