பயங்கரவாத தாக்குதல் என பொய்த் தகவல்: 13 ஆண்டுக்குப் பின் கைது

பயங்கரவாத தாக்குதல் என பொய்த் தகவல்: 13 ஆண்டுக்குப் பின் கைது

1 mins read

சிங்கப்பூரின் 40வது தேசிய தின அணிவகுப்பின்போது பயங்கரவாதத் தாக்குதல் நடக்கப்போகிறது என்று பொய் சொன்ன ஒருவர் அணிவகுப்பு நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்று தெரியவருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. பொய் என்று தனக்குத் தெரிந்த ஒரு தகவலை, அரசாங்க ஊழியரிடம் தெரிவித்ததாக அந்த 42 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

அவர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனிலிருந்து இங்கு விமானத்தில் வந்த அந்த ஆடவர் இந்த ஆண்டு மே 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 2005 ஜூலை 24ஆம் தேதி அந்தப் பொய்த் தகவலை தெரிவித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு வரை சிறை மற்றும் $5,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.