ஏஎக்ஸ்ஏ லைஃப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் காப்புறுதி முகவரான ரமேஷ் கிருஷ்ணன் அந்த நிறுவனத்திடமிருந்து $3.2 மில்லியன் தொகையையும் அதற்கான ஆறு ஆண்டு காலத்திற்கான வட்டியையும் இழப்பீடாகப் பெறுகிறார். காப்புறுதித் தொழில்துறையில் இடம்பெற்ற நியாயமற்ற பரிந்துரைகள் என்று கூறப்படும் இந்த விவகாரத்தில் இதுவே ஆக அதிக இழப்பீடு என்று தெரிகிறது. திரு ரமேஷ் கிருஷ்ணனுக்கு, 48, $4.026 மில்லியன் இழப்பீடு தரவேண்டும் என்று சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து ஏஎக்ஸ்ஏ நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
அந்த முறையீட்டை விசாரித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. ஏஎக்ஸ்ஏ நிறுவனம் கொடுத்த கடுமையான ஒரு பரிந்துரைக் கடிதம் காரணமாக திரு ரமேஷ் கிருஷ்ணன், போட்டி நிறுவனமான புரூடென்ஷியல் நிறுவனத்தில் சேரும் வாய்ப்பை இழந்துவிட்டார். ஏஎக்ஸ்ஏ நிறுவனம் கவனக்குறைவுடன் செயல்பட்டதன் காரணத்தால் திரு ரமேஷ் கிருஷ்ணனுக்கு ஏற்பட்டுவிட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் அவருக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

