தில்லுமுல்லு மின்னஞ்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தில்லுமுல்லு மின்னஞ்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

1 mins read

தன் பெயரைச் சொல்லி பொதுமக்களுக்குத் தில்லுமுல்லு மின்னஞ்சல்கள் வருவதாகவும் அப்படி வந்தால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படியும் சிங்கப்பூர் நாணய ஆணையம் பொதுமக்களை விழிப்பூட்டி இருக்கிறது. தனிப்பட்டவர்களின் இணைய முகவரியையும் ரகசிய குறியீட்டு எண்ணையும் பெறும் நோக்கத்தில் இந்தத் தில்லுமுல்லு வேலைகள் இடம்பெறுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகைய மின்னஞ்சல்கள் @mas.gov.sg என்ற முகவரியில் இருந்து அனுப்பப்படுகின்றன. யாருக்காவது இத்தகைய மின்னஞ்சல் வந்தால் அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம் என்றும் பதிலளிக்கவேண்டாம் என்றும் ஆணையம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

உங்களுக்கு வெளிநாட்டு மத்திய வங்கிகளிலிருந்து பணம் வந்திருப்பதாக அத்தகைய மின்னஞ்சல்களில் சில தெரிவிக்கும். அப்படி தெரிவித்துவிட்டு அந்தப் பணத்தைப் பெறுவதற்குக் கட்டணம் ஒன்றைச் செலுத்துமாறு அந்த மின்னஞ்சல்கள் கேட்டுக்கொள்கின்றன. அதோடு, ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்புமாறு அவை கோரிக்கை விடுக்கின்றன. சொந்த விவரங்களை அல்லது வங்கிக் கணக்கு தகவல்களைத் தெரிவிக்கும்படி பொதுமக்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் எந்த ஒரு சூழ்நிலையிலும் கேட்காது என்று அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் பெயரில் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் வந்தால் அது பற்றி webmaster@mas.gov.sg என்ற முகவரி மூலம் ஆணையத்திடம் தெரியப்படுத்தி விடுங்கள்.