அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் நேற்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 25 வயது ஆடவர் ஒருவர் மரண மடைந்தார். அந்த ஆடவர் பயணம் செய்த வாகனம் சாலைத் தடுப்புகளில் மோதி பிறகு ஒரு மரத்தின் மீதும் மோதி நின்றது. விபத்தில் சிக்கிய வாகனத்தை ஓட்டிவந்த வேறு ஓர் ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து நேற்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு ஸ்பிரிங்டேல் கண்டோமினியம் புளோக் அருகே நிகழ்ந்தது. விபத்தையடுத்து வாகனத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட ஓட்டுநரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வெளியே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக அந்த வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று போலிஸ் தெரிவித்தது. புலன்விசாரணைகள் நடந்துவருகின்றன.

