சகோதரியைக் கொல்ல முயன்றவருக்கு ஐந்தாண்டு சிறை

சகோதரியைக் கொல்ல முயன்றவருக்கு ஐந்தாண்டு சிறை

2 mins read

தமது சகோதரியைக் கொலை செய்ய முயன்ற 80 வயது ஆடவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அந்த இருவரின் இன்னொரு சகோதரியுடைய இறுதிச் சடங்கில் இந்தக் கொலை முயற்சி நடந்தது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதியன்று தமது சகோதரியைக் கொலை செய்ய முயன்றதை சான் டக் சிங் ஒப்புக்கொண்டார். தீர்ப்பு அளிப்பதற்கு முன்பு குற்றம் நிகழ்வதற்கான சூழ்நிலையை நீதிபதி கருத்தில் கொண்டார். இந்தக் குற்றத்தை சான் மீண்டும் புரியும் சாத்தியம் மிகவும் குறைவு என்றார் அவர்.

சானின் வயதும் கருத்தில் கொள்ளப்பட்டது. போலிசாரிடம் சரணடைந்த சான் குற்றம் நிகழ்ந்த மறுநாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். அவரது தண்டனைக் காலம் அப்போதிலிருந்து தொடங்குவதாக எடுத்துக்கொள்ளப்படும். சான் தனியாக வசித்து வந்ததாகவும் 15 ஆண்டுகளாக வேலையின்றி இருந்ததாகவும் அறியப்படுகிறது. தமது தாயாரிடமிருந்து அவர் கைகாசு பெற்று வந்ததாக தெரிவிக் கப்பட்டது.

2006ஆம் ஆண்டில் அவரது தாயார் இறந்ததும் அவரது தங்கையான திருவாட்டி சான் சோ போ அவருக்கு மாதந்தோறும் $510 தந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று திருவாட்டி சான் சோ போ அவரது இல்லத்தில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். தமக்கு இனி எப்படி பணம் கிடைக்கும் என்ற கவலை சானைத் தொற்றிக்கொண்டது. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கின்போது தமது மற்றொரு சகோதரியான 69 வயது சான் சோ லின்னை அவர் அணுகினார். தமக்கு மாதந்தோறும் பணம் தருவது குறித்து அவர் பேசிப் பார்த்தார். அதற்கு சோ லின் மறுப்பு தெரிவித்தார்.