சிங்கப்பூரில் விரைவாகவும் எளிதாகவும் கடன் கிடைப்பதால் பணிப்பெண்களில் பலரும் கடன் வாங்கி கடன் வலையில் விழுந்துவிடுகிறார்கள். வீட்டு வேலைக்கு வந்திருக்கும் பெண்கள் வெளியே கடன் வாங்குவது தெரியவந்தால் முதலாளிகள், அத்தகைய பணிப்பெண்களை அவர்களுடைய நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். பணிப்பெண்களைப் பொறுத்தவரையில் உரிமம் பெற்று கடன் கொடுக்கும் தொழிலை நடத்திவரும் நிறுவனங்கள்தான் முக்கியமான நேரத்தில் அவர்களுக்கு கைகொடுத்து உதவும் அமைப்புகளாக இருக்கின்றன.
பணிப்பெண்களை வேலையில் அமர்த்தி உதவுகின்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள், இந்தத் தகவலைத் தன்னிடம் கூறியதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரில் உரிமம் பெற்று கடன் வழங்கும் நிறுவனங் களிடமிருந்து கடன் வாங்கும் வெளிநாட்டினர் அதிகரித்து இருக்கிறார்கள் என்பது சட்ட அமைச்சும் மனிதவள அமைச்சும் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது. 2016ல் 7,500 பேராக இருந்த இந்த எண்ணிக்கை, இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 35,000 பேராக அதிகரித்து இருக்கிறது. சட்டவிரோத கடன் முதலைகளிடம் இருந்து அதிக வெளிநாட்டினர் கடன் வாங்குகிறார்கள் என்பது போலிசுக்கு தெரியவந்துள்ளது.

