பொங்கோல் வீட்டில் தீ விபத்து; பெண் மரணம்

1 mins read

பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்பு ஒன்றில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 63 வயது திருவாட்டி மைமூன் ஷரிஃப் என்பவர் உயிரிழந்தார்; மூன்று வயதுக் குழந்தை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. பொங்கோல் சென்ட்ரல், புளோக் 163ன் நான்காம் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியதால் உதவி கேட்டு நேற்று நண்பகலில் அழைப்பு வந்ததை அடுத்து, தமது படையினரை அங்கு அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

தமது பேரப்பிள்ளைகளுக்காக தமது தாயார் மதிய உணவு சமைத்துக்கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக இறந்த மாதின் இரண்டாவது மகன் ஹஃபிஸால் முகம்மது தாஹிர் கூறினார். தீ பற்றிய வீட்டை உடைத்து குடிமைத் தற்காப்பு அதிகாரி உள்ளே சென்றபோது, நான்கறை வீட்டின் அறை ஒன்றில் தமது 3 வயது மகள் விளையாடிக் கொண்டிருந்ததாக தாயார், மனைவி, மகளுடன் அதே வீட்டில் வசிக்கும் திரு ஹஃபிஸால் கூறினார்.

சுயநினைவுடன் இருந்த அக்குழந்தை கே கே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சமையலறையில் தீ விபத்து நிகழ்ந்ததாகவும் நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்துவிட்ட தாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அசைவின்றிக் கிடந்த திருவாட்டி மைமூன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட தாக குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவப் படையினர் தெரிவித்தனர்.