சாலையில் கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்திய டாக்சி ஓட்டுநர்

சாலையில் கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்திய டாக்சி ஓட்டுநர்

1 mins read
e2131c3e-0f9c-4456-8a24-c0814f05ebf5
-

தமது டாக்சியில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது சாலையில் கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்திய 58 வயது டாக்சி ஓட்டுநர் வில்லியம் லீக்கு சமூக ஊடகங்க ளில் பாராட்டுகள் குவிகின்றன. சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திரு லீ செயல்பட்டார். நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 2.50 மணிக்கு சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் அவென்யூ 2ல் சென்றுகொண்டிருக்கும்போது சாலையில் கிடந்த அந்த மரக்கிளை திரு லீயின் டாக்சியை உரசி விட்டது.

அதை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் திரு லீ, தொடர்ந்து பயணம் செய்து சாலைச் சந்திப்பில் 'யு-டர்ன்' செய்து திரும்பி அந்தச் சாலையில் வந்து அந்தக் கிளையை அப்புறப்படுத்தினார். (படம்) "என்னை சீண்டிவிட்டு, சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த அந்தக் கயவனை மீண்டும் அங்கு சென்று அவனது கழுத்தைப் பிடித்து தூக்கி எறிந்தேன்," என்று திரு லீ தமது ஃபேஸ்புக் பதிவில் நகைச்சுவையாக எழுதியிருந்ததை பலரும் ரசித்தனர். இச்சம்பவம் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய திரு லீ, "சாலையில் கிடக்கும் மரக்கிளையின் மீது ஏறி மற்ற வாகனங்கள் செல்லும்போது, அதன் முறிந்து போன கிளைகள் பறந்து மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடும். இவ்வாறு தேவையில்லாத விபத்துகளைத் தவிர்க்க அதிக நேரம் தேவைப்படாது. அதனால்தான் அவ்வாறு செய்தேன்," என்றார்.