ராஃபிள்ஸ் பிளேசுக்கு அருகில் உள்ள அல்டிமட் கிளப்புக்கு வெளியே ரஷ்ய பெண் ஒருவர் அவரது கணவருடன் சண்டையிட்டபோது அங்கு சென்ற பெண் காவலரை அந்தப் பெண் அறைந்தார். சென்ற ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது, அவரது கணவரும் கிளப் விளம்பரதாரர் ஒருவரை முகத்தில் தாக்கியதாகக் கூறப்பட்டது. 29 வயதாகும் தம்பதி பொது இடத்தில் தொல்லை அளித்ததையும் தாக்கியதையும் இம்மாதம் இரண்டாம் தேதி ஒப்புக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு முன்பு தம்பதி இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஸ்வெட்லானா ஃபில்மோனோவா எனப்படும் அந்த ரஷ்ய பெண்ணுக்கு நேற்று இரண்டு வார சிறைத் தண்டனையும் $500 அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது கணவர் மேல்ஸ் மிலனுக்கு $4,500 அபராதம் விதிக்கப்பட்டது.

