மழையிலும் நனையாத தீமிதித் திருவிழா

மழையிலும் நனையாத தீமிதித் திருவிழா

2 mins read

எஸ்.வெங்கடேஷ்வரன்

சுமார் 31 ஆண்டுகளுக்கு முன் னால் தம் கணவரை சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடை பெற்ற தீமிதித் திருவிழாவில் முதன்முதலாகப் பார்த்தார் திருமதி வைரம்மாள் சாந்தி, 50. கடந்த 36 ஆண்டுகளாக தீமிதித் திரு விழாவில் பங்கேற்கும் திருமதி சாந்தி தாம் விரும்பியவரை 22 வயதில் திருமணம் செய்தார். நேற்று முன்தினம் நடந்த தீமிதித் திருவிழாவில் பங்கேற்ற 660 பெண் பக்தர்களில் திருமதி சாந்தியும் ஒருவர். அவருடன் சேர்ந்து அவரின் 54 வயது நிரம்பிய கணவர் திரு உதய சூரியன் சகாதேவன் 3,831 ஆண் பக்தர்களுடன் பூக்குழியில் இறங் கினார்.

இவர் 23 வயதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் தீமிதித் திருவிழாவில் பங்கேற்று வருகிறார். இருவரும் மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். "12 வயதிலிருந்து ஒவ்வொரு வாரமும் மாரியம்மன் கோயிலில் என் தந்தையுடன் விளக்கு தீபம் ஏற்ற வருவேன். அம்மன் மீது எனக்கு இருக்கும் ஆழ்ந்த பக்தியால், தீமிதியை ஒட்டிய வழிபாடுகளில் ஈடுபடுகிறேன். இதனால் என் வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டது எனக்குக் கிடைத்தது என்று நம்புகிறேன். நான் விரும்பியவரைக் காதல் திருமணம் செய்ததும் அதில் ஒன்று," என்றார் திருமதி சாந்தி. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் முடிந்த இவ்விழா சுமுகமாக நடைபெற மாரியம்மன் கோயில் ஊழியர்கள் 20 பேரும் கிட்டத்தட்ட 1,00-0 தொண்டூ ழியர்களும் கைகொடுத்தனர். அதுபோக தீவு முழுவதும் உள்ள ஏறத்தாழ இதர 25 ஆலயங்களைச் சேர்ந்த அர்ச்சகர்கள், பக்தர் களுக்கு கங்கணம் கட்டுவதற்கு உதவினர்.

தீமிதி நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று காலை சுமார் 10.10 மணியிலிருந்து 11.15 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலும் பெய்த கனத்த மழையால் விழா ஏற்பாடுகள் சற்று தாமதமாகியதே தவிர, திட்டமிட்டபடி விழா நடந் தேறியது என்றார் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாக குழுத் தலைவர் திரு சீ லட்சுமணன்.