சிங்கப்பூரின் மொத்த பணவீக்கத்தில் மாற்றமில்லை. செப்டம்பரில் இருந்த அதே பணவீக்க விகிதம் கடந்த மாதத்திலும் பதிவானது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தனியார் போக்குவரத்துச் செலவினங்கள் மீண்டும் சரிவு கண்டன. ஆனால் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன. அனைத்து பொருட்களுக்கான விலை உயர்வைக் கணக்கிடும் பயனீட்டாளர் விலைக் குறியீடு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 0.7 விழுக்காடு ஏற்றத்தைப் பதிவு செய்தது. உணவு, வர்த்தக விலைகளின் பணவீக்கம் மெதுவடைந்தது இதற்குக் காரணம்.
ஆனால் முன்னுரைக்கப்பட்டதைப் போலவே சிங்கப்பூரின் மையப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட மையப் பணவீக்கம் 0.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மையப் பணவீக்கம் 1.9 விழுக்காடாகப் பதிவானதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் தெரிவித்தன. அதிகரித்து வரும் மின்சார, எரிவாயு விலைகள் மையப் பணவீக்கம் உயர்வதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

