தமது முன்னாள் மனைவியைக் கொன்ற சிங்கப்பூர் வர்த்தகருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 69 வயது பான் ஆ பிங் தமது மனைவியை அடித்துக் கொன்று அவரது உடலை பயணப் பெட்டிக்குள் திணித்து பெர்த் நகரில் இருக்கும் சுவான் நதியில் வீசியதாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது. இந்தக் கொலை 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழ்ந்தது. பயணப் பெட்டிக்குள் 58 வயது அன்னபேல் சென்னின் அரை நிர்வாண உடலை மீனவர்கள் இருவர் கொலை நிகழ்ந்து இரண்டு நாட்கள் கழித்து கண்டெடுத்தனர்.
கொலைக் குற்றத்தை மறைக்க முயன்ற குற்றத்துக்காக பான்னுக்கும் திருவாட்டி சென்னுக்கும் பிறந்த மகளான 27 வயது டிஃபனி வானுக்கு நான்கு ஆண்டு, 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தமது முன்னாள் மனைவியைக் கொலை செய்தது தொடர்பில் பான் எவ்வித வருத்தமும் தெரி விக்காததைச் சுட்டிய நீதிபதி, அவருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை கொண்ட ஆயுள் தண்டனை விதித்தார்.
பான்னுக்கும் திருவாட்டி சென்னுக்கும் 2000ஆம் ஆண்டில் மணமுறிவு ஏற்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச் சாட்டை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மூன்று வார வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக் கப்பட்டது. வழக்கின்போது தந்தையும் மகளும் ஒருவரையொருவர் குறை கூறினர். தமது தந்தைக்கும் தாயாருக்கும் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக டிஃபனி வான் தெரிவித்தார்.

