மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட சந்திரன்

மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட சந்திரன்

2 mins read
84217b07-9790-4ca7-a2be-8e314e5303a1
-

உற்பத்தித்திறன், புத்தாக்க வரிச் சலுகைத் திட்டத்தின்கீழ் ரொக்கத்தையும் போனஸ் களையும் பெற மோசடியில் ஈடுபட்டதாக மாயவித்தைக் கலைஞரான 37 வயது எஸ். சந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். $1.1 மில்லியன் மதிக்கத்தக்க மோசடிக் கோரிக்கைகளை சமர்ப்பிக்க அவர் 49 பேருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றத்தை அவர் 2013ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் சமர்ப்பித்த கோரிக்கைகளை ஏற்று உள்நாட்டு வருவாய் ஆணையம் $876,684 வழங்கியது. வருமான வரிச் சட்டத்தின்கீழ் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 18 குற்றச்சாட்டுகளைத் தகவல் தொழில்நுட்பப் பயிற்றுவிப்பாளராக இருந்து மாயவித்தைக் கலைஞராக மாறிய சந்திரன் நேற்று ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பு அளிக்கும்போது மேலும் 40 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும். உற்பத்தித்திறனை ஊக்குவிக்க உற் பத்தித்திறன் புத்தாக்க வரிச் சலுகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உற்பத்தித் திறன், புத்தாக்கம் ஆகியவற்றை மேம்படுத்த ஊழியர்களுக்கான பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், தானியங்கி இயந்திரங்கள் போன்றவற்றில் முதலீடுகளைச் செய்யும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் வரிக் கழிவு அல்லது வழங்குத் தொகைகள் வழங்கப்படும். திட்டத்தால் கிடைக்கும் சலுகைகளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் குறைந்தது மூன்று உள்ளூர் ஊழியர்களை வேலையில் அமர்த்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் உற்பத்தித்திறன், புத்தாக்க வரிச் சலுகைத் திட்டத்துக்கு நிறுவனங்கள் தகுதி பெற முடியும். உற்பத்தித்திறன், புத்தாக்க வரிச் சலுகைத் திட்டத்துக்குத் தகுதி பெறாதோரும் அந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையைப் பெற, பாரடைஸ் கன்சல்டன்சி எனும் நிறுவனத்தின் உரிமையாளருமான சந்திரன் உதவியதாக அறியப்படுகிறது. அவர்களுக்கு உதவி செய்ததற்குச் கைமாறாக, கிடைக்கும் தொகையில் பாதியை அவர் வைத்துக்கொண்டதாக தெரி விக்கப்பட்டது. சந்திரன் தற்போது 200,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதியன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.2018-11-24 06:00:00 +0800