மலேசியாவுடனான பிரச்சினைகளை "அமைதியாகவும் ஆக்ககரமாகவும்" சிங்கப்பூர் கையாளும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தமது புத்தாண்டுச் செய்தியில் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர், உள்ளூர் பிரச்சினைகள், தலைமைத்துவ மாற்றம் போன்றவை குறித்து அவர் பேசினார். அனைத்துலக உறவுகள் பற்றிக் குறிப்பிடுகையில், மிகவும் அருகிலுள்ள நாடுகளுடான உறவுகளை சிங்கப்பூர் கட்டிக்காத்து வருகிறது என்றார் அவர். இந்தோனீசியாவுடனான உறவு குறிப்பிடத்தக்க ஒத்துழைப்புடன் ஆக்ககரமாக இருப்பதாகவும் முதலீடுகள் இருதரப்பிலும் இடம் பெற்று வருவதாகவும் திரு லீ கூறினார்.
மே மாதம் நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசியா புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது. மலேசியாவுடன் ஆக்கபூர்வ மான பங்காளித்துவத்தைக் கட்டிக்காப்பதில் சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது என்ற திரு லீ, இரு தரப்பின் புதிய தலைவர்களும் நல்லுறவை வளர்த்துக்கொள்வதை தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். "வரலாறு, பொருளியல், கலாசாரம், உறவுகளால் அணுக்க மாகப் பிணைக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கிடையே அவ்வப்போது ஏற்படுவதுபோல் சிங்கப்பூர்- மலேசியா இடையே அண்மையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன," என்றார் பிரதமர்.

