தொலைநோக்குக் கொள்கைகள் நடப்பில் உள்ளதாலும் வலுவான குழு தலைமைப் பொறுப்பில் உள்ளதாலும் சிங்கப்பூரர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ளலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். தனது புத்தாண்டு செய்தியில் கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், பிரச்சினைகள் குறித்து பிரதமர் லீ விவரித்திருந்தார். அனைத்துலக ரீதியில் சிங்கப்பூரின் நிலைப்பாடு, உள்ளூர் பிரச்சினைகள், தலைமைத்துவ மாற்றங்கள் போன்றவை அவற்றில் அடங்கும். உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை சிங்கப்பூர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் திரு லீ தெரிவித்தார்.
மற்ற பல நாடுகளில் சம்பள உயர்வு தேக்கம் அடைந்து, வாழ்க்கை மேம்படாமல் அரசியல் கட்டமைப்பு முறையாக செயல்படாமல் மக்கள் கோபம் கொண்டுள் ளதால் பல சமூகங்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன என்ற திரு லீ, அண்மையில் பிரான்சில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் இதற்குச் சான்று என்று சுட்டினார். "மிகவும் வெளிப்படையான சமூகமாக சிங்கப்பூர் விளங்குவதால் இதுபோன்ற அழுத்தங்களை எதிர்நோக்கியது. ஆனால், மற்ற நாடுகளைவிட நாம் அவற்றைச் சிறப்பாகச் சமாளித்தோம். அனைத்து சிங்கப்பூரர்களின் வாழ்வையும் மேம்படுத்த நாம் ஒன்றாக ஒற்றுமையாக உழைத்ததே இதற்குக் காரணம்," என்று திரு லீ கூறினார்.

