சிங்ஹெல்த் ரகசிய அறிக்கை அமைச்சர் ஈஸ்வரனிடம் தாக்கல்

சிங்ஹெல்த் ரகசிய அறிக்கை அமைச்சர் ஈஸ்வரனிடம் தாக்கல்

2 mins read

சிங்ஹெல்த் நோயாளிகளின் தரவுத் தொகுப்பில் நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் குறித்த விரி­வான விவரங்கள் அடங்கிய உயர் ரகசிய அறிக்கை இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு­ வகிக் கும் அமைச்சரான எஸ்.ஈஸ்வரனி டம் நேற்று சமர்ப்­பிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற 22 நாள் விசாரணை­யில் 37 சாட்சிகளிடம் திரட்­டப் ­பட்ட அனைத்து சாட்சியங்­களின் மதிப்பீட்டுடன், இதுபோன்ற தாக்குதலைத் தடுக்கும் வகையில், பெரிய அளவிலான தரவுத் தொகுப்புகளைப் பாதுகாப்ப­தற்­கான பரிந்துரைகளையும் அந்த அறிக்கை கொண்டிருப்பதாக விசாரணைக் குழுவின் செயலகம் தெரிவித்தது. "இந்த அறிக்கை, முக்கிய தக­வல்களைக் கொண்டுள்ளது. அதனால் இது உயர் ரகசிய அறிக்கையாக வகைப்படுத்தப்பட்­டுள்ளது," என்று அமைச்சர் ஈஸ்வரனுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

ஒரு நாட்டின் சார்பாக திறமை­யான இணைய ஊடுருவிகளால் அரங்கேற்றப்பட்டது என நம்பப்­படும், அறிக்கையின் முழு விவ­ரங்­கள் தேசிய பாதுகாப்பு காரணமாக ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. எனினும், பரிந்துரைகள் அடங்­கிய தனி அறிக்கையை ஜனவரி 10ஆம் தேதியன்று பொதுமக்க­ளுக்கு வெளியிடும் என்று தொடர்பு தகவல் அமைச்சு தெரி­வித்தது. http://mci.gov.sg/coireport என்ற இணையப்பக்கத்­தில் அந்த அறிக்கையை பொதுமக்கள் பார்க்கலாம். அறிக்கையிலுள்ள விவரங்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்­களின் ஒருமித்த கருத்தாகும் என்றும் குழு கூறியது.

தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சுகாதார அமைச்சர் கான் கிம் இயோங் இருவரும் இந்த அறிக்கையை ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிப்­பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பவம் குறித்து விரிவாக ஆராய்ந்திருப்பதுடன் இத்தகைய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க சிங்ஹெல்த் மற்றும் ஏனைய பொது சுகாதார குழுமங்கள், பொதுத் துறை போன்றவற்றின் இணையக் கட்டமைப்பை பாதுகாப்­ப­தற்கும் சிறப்பாக நிர்வகிப்ப­தற் குமான பரிந்துரைகளையும் குழு தெரிவித்துள்ளது என்று விசாரணைக் குழுவுக்கு நன்றி தெரிவித்த கடிதத்தில் திரு ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். "கடந்த ஐந்து மாதங்களாக இடம்பெற்ற கடுமையான விசாரணை, விரிவான உண்மை கண்டறியும் செயல்முறைகளைத் தொடர்ந்து விசாரணைக் குழுவின் அறிக்கை உருவாக்கப்பட்டது. அறிக்கை இறுதிசெய்ய மேலும் பல வாரங்கள் செலவிடப்பட்டன," என்றும் அவர் கூறினார்.