தேசிய சேவை முக்கியமானது - அதிபர் ஹலிமா யாக்கோப்

தேசிய சேவை முக்கியமானது - அதிபர் ஹலிமா யாக்கோப்

1 mins read

பாதுகாப்புச் சூழல் அதிக சிக்கலாகி வரும் வேளையில் தேசிய சேவைக்கும் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். "நமது இல்லத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும். எனவே, உங்களது சேவை நாட்டுக்கு முக்கியம்," என்று திருவாட்டி ஹலிமா, சாஃப்டி ராணுவ பயிற்சிக் கழகத்தில் அதிகாரிகளுக்கான ஆணை வழங்கும் அணிவகுப்பில் நேற்று முன்தினம் உரையாற்றியபோது கூறினார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிங்கப்பூரின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் வலுவான, நம் பகத்தன்மை வாய்ந்த சிங்கப்பூர் ஆயுதப்படைகள் அஸ்திவாரங்களை அமைத்ததாக அதிபர் தெரிவித்தார்.

மிரட்டல்களுக்கு பதில் கூறுவதற்கான உறுதியையும் ஆயுதப்படைகள் சிங்கப்பூருக்கு வழங்குவதாகவும் தலைமுறை தலைமுறையாக பாடுபட்ட சேவையாளர்களிடம் இருந்து ஆயுதப் படைகள் தங்களது வலிமையைப் பெறுவ தாகவும் திருவாட்டி ஹலிமா கூறினார். பயிற்சி அதிகாரிகளுக்கான பள்ளியில் 38 வாரங்க ளாகக் கடுமையான பயிற்சியை மேற்கொண்ட 384 பயிற்சி அதிகாரிகள் இந்த அணிவகுப்பில் ராணுவ அதிகாரிகளாக உறுதி செய்யப்பட்டனர். இவர்களில் 300 பேர் ராணுவப் படையையும் 34 பேர் கடற்படையையும் 50 பேர் ஆகாயப் படையையும் சேர்ந்தவர்கள்.