போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், தமது அமைச் சுக்கான அடுத்தாண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தை வழிநடத்தும்படி அந்த அமைச்சின் இரண்டு மூத்த துணையமைச்சர்களான டாக்டர் லாம் பின் மின்னையும் டாக்டர் ஜனில் புதுச்சேரியையும் கேட்டுக்கொண்டுள்ளார். இவர்களின் வழிநடத்தல், தலைமைத்துவ மாற்றத்தில் ஒரு பகுதி என்று திரு கோ, செங்காங் ரயில் பணிமனைக்கு நேற்று முன்தினம் சென்றபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"இந்த இளைய அமைச்சர்கள், தங்களது தலைமுறையைச் சேர்ந்த இளம் சிங்கப்பூரர்களைச் சென்றடைவதற்கான திறனைக் கொண்டிருக்கவேண்டும். இவர்கள் அனைவரும் இணைந்து, சிங்கப்பூருக்கான தங்கள் குறிக்கோள்களை ஒரு வரோடு ஒருவருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்," என்று உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கோ கூறினார். இம்மாதத்தின் முற்பகுதியில் பிரதமர் லீ சியன் லூங், அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என தெரிவித்தார்.

