1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் கோல்ட்மென் சாக்ஸ் வங்கியாளரான டிம் லெய்ஸ்னெர் மீது தொடுத்துள்ள குற்றச்சாட்டு களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாணய ஆணையம் லெய்ஸ்னெர் மீது வாழ்நாள் தடை உத்தரவு விதித்துள்ளது. வங்கியின் அனுமதியின்றி அதற்குத் தெரியாமல் வங்கி சார்பாக லெய்ஸ்னெர் போலித் தகவல் வெளியிட்டதற்காக ஏற்கெனவே மார்ச் மாதத்தில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அவருக்கு பத்தாண்டு தடை உத்தரவைப் பிறப்பித்து இருந்தது.
கோல்ட்மென் சாக்ஸ் (ஆசியா) சார்பில் லக்ஸம்பெர்க்கின் ஒரு நிதி நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப் படாத ஒரு மேற்கோள் ஆவணத் தையும் அவர் அளித்திருந்ததாக தெரிய வந்தது. இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள வாழ்நாள் தடையால் லெய்ஸ்னெர், நிதி பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டத்தின்கீழ் எந்த விதக் கட்டுப்படுத்தப்பட்ட நட வடிக்கையிலும் ஈடுபட முடியாது.

