தியோங் பாருவில் செயல்படும் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை அழைத்துச் செல்ல முயன்ற பெரியவர் ஓர் அப்பாவி என்பது தெரியவந்து இருக்கிறது. ஹாவ்லக் ரோட்டில் இருக்கும் மேப்பிள் பியர் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியை அழைத்துச் செல்ல ஒரு முதியவர் முயன்றதாக தியோங் பாரு வில்லேஜ் என்ற சமூக இணையப் பக்கம் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு இருந்தது. அந்தச் சம்பவம் பற்றி போலிசிடம் புகார் தெரிவிக்கப் பட்டதாகவும் அது பற்றி புலன்விசாரணை நடந்ததாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
பிறகு தியோங் பாரு வில்லேஜ் புதன்கிழமை புதிய விவரங்களை வெளியிட்டது. சிறுமியை அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் கெட்ட எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவித்த அந்த இணையப் பக்கம், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளைப் பாராட்டியது. அந்தப் பராமரிப்பு நிலையத்திற்குத் தன்னுடைய பேத்தியை அழைத்துச் செல்ல அந்தப் பெரியவர் அங்கு சென்றார். ஆனால் அவரின் பணிப்பெண் அந்தச் சிறுமியை ஏற்கெனவே அழைத்துச் சென்றிருந்தார். பராமரிப்பு நிலையத்தினர் முதியவரின் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போனதால் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

