செய்தி: இர்ஷாத் முஹம்மது
உலக முதலீடுகளை இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு ஈர்க்கும் நோக்கத்தில் 'துடிப்புமிக்க குஜராத்' அனைத்துலக உச்சநிலை மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் 18, 19, 20ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
அந்த உச்சநிலை மாநாட்டிற்கு சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 20 பேர் கொண்ட பேராளர் குழு குஜராத்திற்கு செல்லவுள்ளது. அந்தக் குழுவை சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் மன்றம் வழிநடத்தும்.
"பொதுத்துறை, தனியார்துறையைச் சேர்ந்த 20 நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கின்றனர். இதுவரை மன்றம் வழிநடத்திய பேராளர் குழுவில் ஆகப் பெரியதாக இது உள்ளது," என்று கூறினார் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கே பரதன்.
சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் போன்ற பொதுத்துறை அமைப்புகளும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தெமாசெக் ஹோல்டிங்ஸ், அசென்டாஸ், சிங்கப்பூர் துறைமுக ஆணையம் போன்ற அரசு சார்பு நிறுவனங்களும் மாநாட்டில் பங்கு பெறுகின்றன.
ஒன்பதாவது முறையாக நடக்கும் இந்த மாநாடு, அனைத்துலக அளவில் சமூகப் பொருளியல் மேம்பாடு குறித்த கருத்துகளைப் பற்றி விவாதிக்கும் தளமாக உருமாறியுள்ளது. உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் 'புதிய இந்தியா' உருவாவதற்குத் தேவையான முழு பொருளியல் வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டு மாநாடு நடக்கவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கிவைக்கவுள்ளார். அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது 2003ஆம் ஆண்டு 'துடிப்புமிக்க குஜராத்' உச்சநிலை மாநாட்டை அறிமுகப்படுத்தினார்.
"இந்தியப் பிரதமர் மோடியின் இரண்டு சிங்கப்பூர் வருகைகளுக்குப் பின் இடம்பெறும் மாபெரும் ஆக்கபூர்வ அதிகாரத்துவ வர்த்தக பங்காளித்துவம் இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கும்," என்று நம்பிக்கைத் தெரிவித்தார் பேராளர் குழுவுக்குத் தலைமைத் தாங்கும் சபையின் துணைத் தலைவர் திரு பிரசூன் முகர்ஜி.
"சிங்கப்பூரிலிருந்து செல்லும் பேராளர்கள் இந்தியாவின் முக்கிய வர்த்தக ஜாம்பவான்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வர்த்தக ரீதியான ஒப்பந்தங்கள் உருவாவதற்கு இந்த மாநாடு தக்க தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். அதற்கான முயற்சிகளைச் சபை எடுத்துள்ளது," என்று திரு முகர்ஜி குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழில் மன்றம்யின் புதிய இயக்குநர் குழு கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றதிலிருந்து மன்றம் தமது செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக இந்தியாவின் வர்த்தக, தொழில் மன்றம்களுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுப் பங்காளித்துவத்தை மேம்படுத்தி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் வர்த்தக, தொழில் சபையுடன் புரிந்துணர்வு குறிப்பை கையெழுத்திட்ட இந்தச் சபை, இந்த மாநாட்டில் குஜராத் வர்த்தக, தொழில் மன்றம்யுடன் புரிந்துணர்வு குறிப்பில் கையெழுத்திடவுள்ளது.
"பல நாடுகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளையும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கும் வர்த்தகத் தளமாக இந்த மாநாடு அமையும். சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். வர்த்தக ரீதியான சந்திப்புகள் பல நிலைகளிலும் மூன்று நாட்கள் நடைபெறும்," என்றார் சபையின் மற்றொரு துணைத் தலைவர் திரு மகேஷ் சிவசுவாமி.
இந்தியப் பிரதமர், குஜராத் முதலமைச்சர், பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

