இரண்டு எஸ்பிஎஸ் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதைத் தொடர்ந்து 10 பயணிகளும் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் காலை சுமார் 6.50 மணிக்கு தெம்பனிஸ் அவென்யூ 10ல் நடந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். காயமடைந் தோரில் ஆறு பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் ஆறு பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்திற்குப் பின்னால் மற்றொரு பேருந்து மோதியதாக 'ஷின் மின்' நாளிதழ் தெரிவித்தது. 127, 168 ஆகிய சேவைகள் விபத்துக்குள்ளானதாகவும் கூறப்பட்டது. எஸ்பிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மருத்துவமனைகளில் காயமடைந்தோரைக் காணச் சென்றதாகவும் பாதிக்கப்பட்டோருக்கு முடிந்தவரை ஆதரவு கொடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவுக்கான மூத்த துணைத்தலைவர் டெம்மி டான் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தின் தொடர்பில் பேருந்து ஓட்டுநர்களில் ஒருவர் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

