உணவுப் பொட்டலத்தில் இறந்த பல்லி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் உணவு நிறுவனமான 'எர்வின்ஸ் சால்டட் எக்', தன் பிரபல தின்பண்ட உணவுப் பொட்டலங்களை மீட்டுக்கொண்டதோடு வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்பத் தர அறிவித்து உள்ளது. நிறுவனம் அதன் அனைத்து உணவுப் பொருள்களையும் சிங்கப்பூரில் தயாரித்து வருகிறது. இதை பேங்காக்கில் வாழும் 38 வயது திருவாட்டி ஜேன் ஹொல்லொவே அங்குள்ள ஓர் அனைத்துலகப் பேரங்காடியில் 29 சிங்கப்பூர் வெள்ளி மதிப்பில் வாங்கியிருந்தார். கிறிஸ்மஸ், புத்தாண்டு ஆகியவற்றைக் கொண்டாடுவதற் காக திருவாட்டி ஜேனை பார்க்க வந்த அவரின் தாயாரும் சகோதர ரும் பொட்டலத்தில் இருந்த பாதியளவு தின்பண்டத்தைச் சாப்பிட்டபின் இறந்த பல்லியின் உடலைக் கண்டுபிடித்தனர்.
தின்பண்டத்தில் கிடந்த பல்லி பார்ப்பதற்கு உணவுடன் சேர்த்துப் பொரிக்கப்பட்டிருந்தது போல் தெரிந்ததாக திருவாட்டி ஜேன் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதோடு படங் களையும் பதிவேற்றம் செய்திருந் தார். பல்லியைக் கண்ட சகோதரர் அது ஒரு மீன்குஞ்சின் தலைப் பகுதியாக இருக்கலாம் என்று நினைத்ததாகக் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்திற்குப் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு நிறுவனம் தன் முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்றும் நிறுவனர் எர்வின் குணவன் கூறினார். இவ்வாண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று காலாவதி ஆகும் இவ்வகைத் தின்பண்ட பொட்டலங்களைப் பொதுமக்கள் திரும்பக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று திரு குணவன் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 'எர்வின்ஸ் சால்டட் எக்' தின்பண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த பல்லி. படம்: ஃபேஸ்புக்/ ஜேன்

