கத்தியுடன் போலிசாரை எதிர்த்து நின்ற ஆடவர் கைது

கத்தியுடன் போலிசாரை எதிர்த்து நின்ற ஆடவர் கைது

1 mins read

புத்தாண்டு அன்று கையில் நீளமான ஒரு கத்தியுடன் பூன் லே டிரைவில் போலிசாரை எதிர்த்து நின்ற 52 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாலை 5.18 மணியளவில் பூன் லே டிரைவில் உள்ள புளோக் 191இல் சம்பவம் குறித்து போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. ஆடவர் குறைந்தது மூன்று அதிகாரிகளைக் கத்தியும் கையுமாக எதிர்த்துக்கொண்டிருந்த காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. ஆடவர் கத்தியைத் தம் கழுத்தருகே தோள் பட்டையில் வைத்தவாறு அதிகாரிகளை எதிர்த்து நின்றார்.

அதிகாரிகளில் ஒருவர் கையில் கலவரத்துக்குப் பயன்படுத்தக்கூடிய கேடயத்தையும் மற்ற இருவரும் கவசங்கள் அணிந்ததையும் காணொளியில் பார்க்கலாம். கத்தியைக் கீழே வைக்கும்படி போலிசார் கூறியும் ஆடவர் ஒத்துழைக்கவில்லை. பின்னர் அதிகாரிகள் வேகமாகச் சென்று, ஆடவரை அடக்கித் தரையில் கிடத்திக் கத்தியை மீட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆயுதம் வைத்திருந்ததோடு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின் சந்தேகத்திலும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.