வேலை தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியிருப்போர் அரசு நீதிமன்றத்துக்குப் போவதற்குப் பதிலாக நாளை மறுநாளிலிருந்து புதிய இணையவாசல் மூலம் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப் பிக்கலாம். தங்கள் அன்றாடப் பணிகளைக் கவனித்தபடியே புதிய இணைய வாசல் மூலம் வழக்கப்படும் சமரச சேவைகளின் வழி வேலை தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காணலாம். இந்த அணுகுமுறை, வேலை தொடர்பான கோரிக்கை மன்றத்தின் புதிய இணையம் வழி சமர்ப்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அரசு நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. $20,000 வரையிலான வழக்க மான சம்பளம் அல்லது ஒப்பந்தம் அடிப்படையிலான சம்பளம் தொடர்பான சர்ச்சைகளை வேலை தொடர்பான கோரிக்கை மன்றம் விசாரிக்கலாம். $30,000 வரையிலான வேலை தொடர்பான சர்ச்சைகள் தொடர் பாக தொழிற்சங்கங்கள் சமரச முயற்சியில் இறங்கி தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டால் கோரிக்கை மன்றம் அவற்றை விசாரிக்கலாம். சிங்பாஸ் அல்லது கோர்ப்பாஸ் மூலம் புதிய இணையவாசலுக்குச் செல்லலாம். சிங்பாஸ், கோர்ப்பாஸ் ஆகியவற்றுக்குத் தகுதி பெறாத வர்கள் சமூக நீதி மற்றும் கோரிக்கை மன்ற முறை சீட்டு களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இணையவாசல் மூலம் உடன் படிக்கைகளைப் பதிவு செய்தல், சர்ச்சை தொடர்பான கோரிக்கை களைச் சமர்ப்பித்தல், ஆவணங் களைச் சமர்ப்பித்தல், வழக்கு விசாரணைக்கான தேதியைத் தேர்ந்தெடுத்தல், கட்டணங்களைச் செலுத்துதல் ஆகியவற்றை செய்ய லாம். வழக்கு எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதை தெரிவிக்கும் தகவல்களையும் வழக்கு விசாரணைகளுக்கான தேதி களையும் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறலாம்.
மின் சமரச சேவை வாயிலாக நீதிமன்றத்துக்குச் செல்லாமல் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்யலாம். சமரசம் காணும் நோக்குடன் முன்வைக்கப்படும் தீர்வுகளைப் பரிசீலனை செய்யவோ அல்லது வேறொரு தீர்வை முன்வைக்கவோ இணையவாசலுக்குச் செல்லும்படி கோரிக்கையைச் சமர்ப்பித்தவர் களுக்குத் தகவல் அனுப்பப்படும்.
மின் சமரச சேவையைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட இருதரப் பினரும் இணங்கினால் நீதிமன்ற மத்தியஸ்தருடனான இணையம் வழி பேச்சுவார்த்தைக்கு வேலை தொடர்பான கோரிக்கை மன்றம் ஏற்பாடு செய்யும். சமூக நீதி மற்றும் கோரிக்கை மன்றத்தின் இணையத்தளம் பாதுகாப்புமிக்கது என்றும் அதைப் பயன்படுத்துவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் அரசு நீதிமன்றம் தெரிவித்தது. இணையவாசலைப் பயன்படுத் தியும் தீர்வு காண முடியாத பட்சத்தில் வேலை தொடர்பான கோரிக்கைகளுக்கான செயல் முறையின் வழக்கு நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணை நிலைகளுக்கு வழக்கு கொண்டு செல்லப்படும்.
வேலை தொடர்பான கோரிக்கை மன்றம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1,700 வழக்குகள் அதில் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி பதிவாகிய வழக்குகளில் 94 விழுக்காட்டு வழக்குகளுக்குத் தீர்வு கிடைத் துவிட்டதாக அரசு நீதிமன்றம் கூறியது. தீர்வு கண்ட வழக்குகளில் பத்தில் ஏழு வழக்குகள் நிர்வாகக் கூட்ட நிலை வரைக்கும் சென்றன.
வேலை தொடர்பான கோரிக்கை மன்றத்திடம் கோரிக்கைகளை சமர்ப்பித்தோரில் பத்தில் மூன்று பேர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் பிரிவைச் சேர்ந்த வர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பளம் கிடைக்கவில்லை, நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைந்த தொகை பெறுதல், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத் தைவிட கூடுதல் நேரம் வேலை செய்ததற்கான சம்பளம், வேலை யைவிட்டு தங்களைப் போகச் சொன்ன பிறகு முதலாளிகள் கொடுக்க வேண்டிய சம்பளத் தொகை ஆகியவை தொடர்பான கோரிக்கைகளே ஆக அதிகமாகக் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது.
வேலை தொடர்பான கோரிக்கை மன்றத்துக்குச் செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டோர் தங்கள் கோரிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும். அதனை அடுத்து, சர்ச்சை களைச் சமாளிப்பதற்காக மனித வள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ள முத்தரப்புப் பங்காளித்துவத்தின் சமரசப் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பங்கெடுக்க வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோரிக்கை மன்றத்தை நாடலாம்.