உலகளாவிய பொருளியல், வேக மாக மேம்பட்டு வரும் தொழில் நுட்பம் ஆகியவற்றின் நிலையற்றத் தன்மையை சிங்கப்பூர் எதிர்நோக்கு வதாகவும் அதைச் சமாளிக்க சிங்கப்பூரின் பொருளியல் உருமாற்றம் தொடர வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், தகுந்த திறன்களை சிங்கப்பூரர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார் அமைச்சர் ஹெங். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக சிங்கப்பூர் மேம்படும் என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவு செய்திருந்தார். எதிர்வரும் வரவுசெலவுத் திட்டம் தொடர்பாகக் கருத்துகளை அனுப்பி வைக்கும்படி அவர் ஃபேஸ்புக்கில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். திரு ஹெங் அடுத்த மாதம் 18ஆம் தேதியன்று இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதுதொடர்பாகக் கடந்த மாதம் 3ஆம் தேதியிலிருந்து பல்வேறு வழிகள் மூலம் சிங்கப்பூரர்களிடமிருந்து நிதி அமைச்சு கருத்து சேகரித்து வருகிறது. இந்தக் கருத்து சேகரிப்பு இம்மாதம் 11ஆம் தேதி நிறைவடையும். கடந்த சில ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகிய முக்கிய துறைகளில் அரசாங்கம் சீரான முறையில் முதலீடு செய்து வருவதாக திரு ஹெங் கூறினார். இதன் விளைவாகப் பாது காப்புமிக்க சுற்றுச்சூழலில் சிங்கப் பூரர்கள் உயர்தர வாழ்க்கையை அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்தார். "ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளும் வகையில் பல்வேறு பிரிவினருக்கான அரசாங்க ஆதரவை மேம்படுத்தி உள்ளோம். சமூகக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்தியுள்ளோம்," என்றார் திரு ஹெங். இருப்பினும், சவால்மிக்க உலகளாவிய சூழ்நிலைகளையும் திரு ஹெங் சுட்டினார். அவற்றை எதிர்கொள்ள சிங்கப்பூரின் பொருளியல் உருமாற்றம் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மாற்றத்தைக் கொண்டு வருவ தில் அனைத்து சிங்கப்பூரர் களுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறிய அமைச்சர் ஹெங், எல்லோருக்கும் மேலும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தர அனைத்து சிங்கப்பூரர்களுடனும் அரசாங்கம் இணைந்து செயல் படுவதாகக் கூறினார். நவீன சிங்கப்பூர் கண்டு பிடிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் இருநூறு ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் சிங்கப்பூரின் முன்னேற் றத்தை மறுஆய்வு செய்ய நல்லதொரு வாய்ப்பைத் தருவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் சிங்கப்பூரை முன்னோக்கிக் கொண்டு செல்ல திட்டமிடவும் நல்ல வாய்ப்பாக அமைவதாக அவர் கூறினார். சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையப்பக்கத்திற்குச் சென்று வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்து களைப் பதிவு செய்யலாம்.

