கார்களுக்கான அதிவேக மின்னூட்டு சாதனங்கள் செயல்பாட்டுக்கு வந்தன

கிராப் வாடகை கார் நிறுவனம் மின்சார கார்களை இயக்கவுள்ள இவ்வேளையில், மின்சார வாகன அதிவேக மின்னூட்டு சாதனங் களை (படம்) எஸ்பி குழுமம் அமைத்து உள்ளது. தீவு முழுவதிலும் உள்ள எட்டு இடங்களில் மொத்தம் 38 அத்தகைய சாதனங்களை அது அறிமுகப்படுத்துகிறது. அவற்றில், 43 கிலோவாட் திறனுடைய ஏசி மின்னூட்டு சாதனங்கள் 19. மற்றவை 50 கிலோவாட் திறனு டைய டிசி மின்னூட்டு சாதனங்கள். இந்த மின்னூட்டு சாதனங்கள் உணவகங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால் ஓட்டுநர் கள் உணவருந்தும் வேளையில் கார்களுக்கு மின்னூட்ட முடியும். அடுத்த ஆண்டுக்குள் எஸ்பி நிறுவனம் அமைக்கப்படவுள்ள 1,000 மின்னூட்டு சாதனங்களில் தற்போது அமைக்கப்பட்டுள்ள 38 சாதனங்கள் முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த சாதனங்கள் அதிவேக மின்னூட்டு திறன் கொண்டவை. மத்திய அளவிலான மின்சார காருக்கு ஒரு மணி நேரத்துக்குள் மின்னூட்டும் திறன் பெற்றவை. அதற்கு வீடுகளில் இருக்கும் மின்னூட்டிகளுக்கு பொதுவாக ஆறு முதல் எட்டு மணி நேரம் தேவைப்படும். இந்த மின்னூட்டு சாதனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிய வும் அவற்றைப் பயன்படுத்தவும் எஸ்பி நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்த வேண்டும். கார்கள் மின்னூட்டப்பட்டதும் அந்தச் செயலி வழியாகத் தெரிவிக்கப் படும். தற்போதைக்கு டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி வங்கிகளின் பணம் செலுத்து அட்டைகள் மூலம் பணம் செலுத்த முடியும். மற்ற முன்னணி வங்கிகளின் அட்டைகளையும் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றது எஸ்பி.