லிட்டில் இந்தியாவில் உள்ள விடுதியில் பெண் மரணம்

லிட்டில் இந்தியா பகுதியில், விடுதி ஒன்றில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்துகிடந்தார். ராபர்ட்ஸ் லேனில் அமைந்துள்ள கடைவீடு ஒன்றில் அவர் அசைவின்றிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நேற்று பிற்பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்திய நாட்டவர் என்று நம்பப்படும் அந்தப் பெண் இறந்துபோனதை துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தி போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களாக இந்த விடுதியில் தங்கியிருந்ததாக திரு ஷெங் என அறியப்படும் விடுதி மேலாளர் கூறினார். அந்த விடுதியில் திரு ஷெங் சுமார் 10 ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். “தனியாக வசித்து வந்த அந்தப் பெண் பெரும்பாலும் உணவருந்தும்போது மட்டுமே வெளியில் காணப்பட்டார்,” என்றார் திரு ஷெங். அந்தப் பெண் இங்கு சுற்றுப்பயணியாக இருந்ததாக எண்ணியதாக அவர் சொன்னார். ஆயினும் அந்தப் பெண் பாலியல் தொழிலாளியாக விடுதிக்கு வெளியில் அவர் செயல்பட்டு வந்தாரா என்பது பற்றி தெரியவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவரைச் சந்தித்ததாக அந்தப் பெண் திரு ஷெங்கிடம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக விடுதி அறையை விட்டு வெளியில் வராததால், அந்தப் பெண்ணின் அறையைத் தட்டியபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்ததாக விடுதியின் மேலாளர் கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்