மதுபோதைச் சோதனையில் வெற்றி பெறத் தவறிய விமானி நீக்கப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு செம்டம்பரில் மதுபோதைச் சோதனையில் வெற்றி பெறத் தவறிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. மெல்பர்னில் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தால் மெல்பர்ன்-வெல்லிங்டன் பயணத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரத்து செய்ய வேண்டிய தாயிற்று.

அந்த விமானி மீது இப்போது சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தனிப்பட்ட விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சிவில் விமானப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய திடீர் மதுபோதைச் சோதனையின்போது அந்த விமானியின் ரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக மது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இதர பங்குதாரர்களுடன் இணைந்து புதிய வழிகளைக் கண்டறிய அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று சிங்கப்பூர் ஏர்லைன்சின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.