கிளமெண்டி ரோடு விபத்து தொடர்பில் முன்னைய டாக்சி ஓட்டுநர் குற்றச்சாட்டு

கிளமெண்டி ரோட்டில் நடந்த வாகன விபத்தில் 19 வயது தேசியப் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தது தொடர்பில் டாக்சி ஓட்டுநர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

டாக்சி ஓட்டுநர் யாப் கொக் ஹவா, 55, தேசிய பல்கலைக்கழக மாணவர் கேத்தி ஓங் காய் டிங்கையும் அவரது மூன்று நண்பர்களையும் கடந்தாண்டு ஏப்ரல் 19ஆம் தேதியில் தனது டாக்சியில் கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து இரவு 7.30 மணிக்கு நடந்தது. 

காமன்வெல்ட் அவென்யூ வெஸ்ட் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்த யாப், கிளமெண்டி ரோட்டுக்குள் நுழைய வலது பக்கம் திரும்பியபோது கார் ஒன்றுக்கு வழிவிட தவறியதால் இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதாக அறியப்படுகிறது. இரண்டு வாகனங்களில் இருந்த அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். டாக்சியின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த குமாரி ஓங் விபத்துக் காயங்களால் மாண்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

$10,000 பிணையில் வெளிவந்த யாப், பிப்ரவரி 1ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படுவார்.