சுடச் சுடச் செய்திகள்

தமிழ் முரசின் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் அறிமுகம்

தமிழ் முரசு நாளிதழின் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் நேற்று அறிமுகம் கண்டது. 

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் முன்னோடித் தலைவரான தமிழவேள் கோ சாரங்கபாணியால் 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் முரசு, சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து சிங்கப்பூரில் தமிழ் மணம் வீசி வருகிறது.

வாசகர்களின் தொடர் ஆதரவுடன் காலத்திற்கேற்ப பல்வேறு  மாற்றங்களுடன் பரிணாம வளர்ச்சி கண்டுவரும் தமிழ் முரசு, இப்போது புதுப்பிக்கப்பட்ட இணையத்தளத்துடன் மின்னிலக்க உலகில் வாசகர்களுடன் இணைவதற்குத் தயாராகிவிட்டது. 

தமிழ் முரசு செய்தியாளர்கள், ஆசிரியர்கள், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவன தலைமைப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நேற்றுப் புதிய இணையத்தளம் அறிமுகம் கண்டது. 

தமிழ் முரசின் நிறுவனத்தில் தொடர்ந்து 61 ஆண்டுகளாகத் துடிப்புடன் பணியாற்றிவரும் மூத்த ஊழியர் 79 வயது திரு எம் நடராசன் புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினார். 

“அச்சுக் கோக்கும் காலம் முதல் பலவகையில் முன்னேற்றம் கண்டுவந்துள்ள தமிழ் முரசு அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது,” என்றார் திரு நடராசன்.

முரசு இணையத்தளம் அடுத்த சில மாதங்களில் இன்னும் மேம்படுத்தப்படும். www.tamilmurasu.com.sg எனும் முரசு தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.புதிய இணையத்தளம் குறித்த கருத்துகளையும் எண்ணங்களையும் வாசகர்கள் tmforum@sph.com.sg எனும் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.