கலைகள், கலாசாரம் போன்றவற்றுக்கான ரசனை இல்லாவிடில் சிங்கப்பூர் உயிரோட்டம் இல்லாத ஒரு சமூகமாக இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் பல்லிய இசைக் குழுவின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதமர் விடுத்த செய்தி ஒன்றில் இதனைத் தெரிவித்தார். "ஒரு மனிதனுக்கு உணவு முக்கியம் என்றாலும் அவன் அந்த உணவோடு மட்டும் வாழ்ந்துவிட முடியாது," என்று அவர் எழு தினார். சிங்கப்பூர் பல்லிய இசைக் குழுவின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இசைக் கச்சேரி பற்றிய தமது குறிப்பில், "நமது கலாசாரத்தை வளமாக்குவதுடன் ஒரு பரிவுமிக்க சமுதாயமாக விளங்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது என்பதை பல்லிய இசைக்குழு உலகிற்கு எடுத்துரைக்க முடியும் என நமது தேச நிறுவனர்கள் நம்பிக்கை கொண்டு இருந்தனர்," என்றார் திரு லீ.
'எஸ்பிளனேட் கான்சர்ட் ஹாலில்' நடைபெற்ற இசைக் கச்சேரியில் பிரதமர் லீ கலந்து கொண்டார். கடந்த 40 ஆண்டுகளில், இந்த இசைக்குழுவில் இருந்த இசைக் கலைஞர்களின் எண்ணிக்கை 41லிருந்து 92ஆக அதிகரித்தது. அவர்களில் பாதி பேர் சிங்கப்பூரர்கள். இந்த இசைக்குழுவின் பிரதான இசைக் கச்சேரி நடத்தப்படும் இடம் எஸ்பிளனேட்டாக இருந்தது. என்றாலும் விக்டோரியா இசை அரங்கிலும் இசைக் கச்சேரி நடத்தப்படுகிறது.

