நவீனமடையும் கட்டுமானத் துறையில் திறன் வளர்ச்சிக்கு $72 மில்லியன் நிதி

சிங்கப்பூரில் கட்டுமானத் துறை, ஊழியர்களை அதிகம் சார்ந்திருப்­பதைவிட்டு அறிவார்ந்த நடைமுறை­ களைக் கடைப்பிடிக்க உதவ $72 மில்லியன் மதிப்பிலான பயிற்சி நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையில் திறன்­களை மேம்படுத்த உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிதி, மாணவர்களுக்கும் பெரியவர்களுக்குமான உபகாரச் சம்பளம் மற்றும் நிதி வழங்கும் திட்டங்களுக்கு கைகொடுக்கும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்­கழகத்தில் நேற்று நடைபெற்ற ‘iBuildSG’ உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து­கொண்டு பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் முதல் 2020ஆம் ஆண்டு மே வரை ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியால் கட்டுமானத் துறையில் பணிபுரியும் கட்டடக்கலை நிபுணர்கள் உட்பட 118,000 உள்ளூர் ஊழியர்கள் பலனடையக்கூடும்.
“சிங்கப்பூர் உட்பட உலகம் முழுவதும் கட்டுமானத் துறை அதிவேகமாக மாறி வருகிறது,” என்று கூறினார் திரு வோங். 
இருப்பினும் போக்குவரத்து, நிதி போன்ற துறைகளில் நிலவும் மாற்றங்களைவிட கட்டு­மானத் துறையில் மாற்றங்களின் வேகம் குறைந்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

படம்: சாவ் பாவ்