லெங்கொக் பாருவில் கொள்ளை, அத்துமீறல் - ஆடவர் கைது

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த சந்தேகத்தின்பேரில் 48 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 8.25 மணிக்கு, புளோக் 55 லெங்கொக் பாருவிலுள்ள அடுக்குமாடி வீடு ஒன்றுக்குள் எவரோ ஒருவர் புகுந்து கொள்ளையடித்ததாக போலிசாருக்குப் புகார் கிடைத்தது.  அந்த வீட்டிலிருந்து ரொக்கமும் கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கிளமென்டி போலிஸ் பிரிவைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகள், விசாரணையின் மூலமாகவும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காணொளிகள் மூலமாகவும் ஆடவரின் அடையாளத்தை உறுதி செய்தனர். அந்த ஆடவர் வீட்டின் வரவேற்பு அறையில் சிவப்பு நிறக் காகித உறையிலிருந்த பொருள் ஒன்றைத் தனது கைப்பைக்குள் போடுவதைக் காட்டும் 10 நிமிடக் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த ஆடவர் தொலைக்காட்சியையும்  ‘சோஃபா’ இருக்கையையும் நகர்த்துவதை காணொளி காட்டுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவர் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை எதிர்நோக்கலாம்.