ஈசூனில் கலவரம்; ஆறு பேர் கைது

கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.ஈசூன் ஸ்திரீட் 72 புளோக் 745ன் கீழ்த்தளத்தில் சென்றுகொண்டிருந்த ஆடவர் ஒருவரை ஒரு கும்பல் திடீரென தாக்கியதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.

தாக்கப்பட்ட 21 வயது ஆடவர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலிசார் வருவதற்கு முன்னர் சந்தேக நபர்கள் சம்பவ இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆறு சந்தேக நபர்களின் அடையாளத்தை விசாரணையின்மூலம் உறுதி செய்தனர். ஜனவரி 18ஆம் தேதி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலிஸ் விசாரணை தொடர்கிறது. கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.