விமானப் பயணச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் கடந்தாண்டு 40 பேர் கைது

விமானப் பயணச் சீட்டுகளைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் கடந்தாண்டு மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

சாங்கி விமான நிலையத்தின் இடைப்பயண வளாகங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக இருப்பதால் விமானத்தில் பயணம் செய்யவிருப்பவர்கள் மட்டும்தான் அங்குச் செல்லவேண்டும் என்று சிங்கப்பூர் போலிஸ், திங்கட்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டது. விமானத்தில் பயணம் செய்யும் நோக்கமில்லாமல் பயணச் சீட்டுகளை வாங்கி இத்தகைய இடைப்பயண வளாகங்களுக்குச் செல்வது உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றமாகும்.

இவ்வாறு சிலர் நுழைந்து தீர்வையில்லாமல் விற்கப்படும் பொருட்களை வாங்க முற்படுகின்றனர்.  இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை, $20,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.